நாகை: பாஜகவின் தேசிய செய்தித்தொடா்பாளராக இருந்த நூபுா் சா்மா, டெல்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவராக இருந்த நவீன் ஜிண்டால் ஆகியோர் இஸ்லாமிய இறைதூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்துக்கு, இப்போது சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனைத்தொடர்ந்து இறைதூதா் முகம்மது நபி குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்ட பாஜக இளைஞர் அணித் தலைவர் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கௌதமன் முன்னிலையில் பழுதடைந்த கட்டடங்களை இன்று (ஜூன்8) ஆய்வு மேற்கொண்டார். பின், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
முழு மனிதனாக முகமது நபியை படியுங்கள்: பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், 'பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகத்தை பற்றி விமர்சனம் செய்துள்ளார்கள். பெரியார், அம்பேத்கர், காமராசர், கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் படித்தவர்கள். பாஜக செய்தித்தொடர்பாளர் முழு மனிதனாக மாற முடியும்.
பேரறிஞர் அண்ணா வழியில் எதிர்ப்போம்: மீண்டும் இதுபோல நபிகள் நாயகத்தைப் பற்றி விமர்சனம் செய்தால், பேரறிஞர் அண்ணா வழியில் எதிர்ப்போம்' என்று எச்சரிக்கை விடுத்தார். அதன்படி, 'நபிகள் நாயகத்தைப் பற்றி விமர்சனம் செய்தால் அந்த விமர்சனத்துக்கான பதில் எப்படி இருக்கும் என்று சொன்னால் பேரறிஞர் அண்ணா, "ஒருவரை விரல் நீட்டி விமர்சனம் செய்யும்போது மூன்று விரல்கள் தன்னை நோக்கியுள்ளது; உற்று கவனி தம்பி என்று சொன்னார்கள்" அந்த விளைவு தான் அவருக்கு ஏற்படும்' ' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலையாக சட்ட வல்லுநர்கள் குழு அமைத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சர்ச்சை கருத்து வெளியிட்டவர்கள்; பாஜகவில் இருந்து நீக்கம்: இந்த நிலையில் பாஜக தேசியச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், கட்சியிலிருந்து சர்ச்சைக்குரியவர்களை நீக்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும்; தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நூபுர் ஷர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக சவூதி அரேபியா, அமீரகம், குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் சர்ச்சையான பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: முகம்மது நபி குறித்து அவதூறு; பாஜக பிரமுகர் கைது!