திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஓ. ஏ ஆர் திரையரங்கம் அருகில் கடந்த 12ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவின் போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவ்வழியாக வந்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முகிலன் என்பவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால், விரக்தியடைந்த முகிலன், அதே இடத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
சம்பவ இடத்தில் முகிலனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர் சந்திரசேகர் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த எட்டு நாள்களாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முகிலன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருடைய உடல் வேலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டபின், அவருடைய சொந்த ஊரான ஆம்பூர் அண்ணாநகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க இன்று காலை முதல் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் , வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்ட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக மதியம் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, முகிலனின் வீட்டிற்கு நேரில் சென்று அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், தீக்குளித்து உயிரிழந்தவரின் மனைவி லீலாவதி 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளதால், அதற்கு ஏற்றார்போல் அரசு வேலை வழங்க பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். முகிலனின் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதி அளித்து ஆறுதல் கூறினார்.