மதுரையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், அதில், "மதுரையில் கடந்த சில ஆண்டுகளாக பழமையான நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன. மதுரை தமுக்கம் மைதானம் 350 வருட பழமைவாய்ந்த வரலாற்று இடமாகும். இம்மைதானத்தில் சித்திரை திருவிழா பொருள்காட்சி, புத்தகத் திருவிழா ஆகியவை நடைபெறும்.
தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமுக்கம் மைதானத்தில் உள்ள பழமைவாய்ந்த அரங்கம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டுவதற்காக கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இம்மைதானமானது 9.68 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது மதுரை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டுவருகிறது. அரசு, தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
மைதானத்தின் உள்ளே சுமார் 1.5 லட்சம் பேர் வரை இருக்க முடியும். அரங்கத்தில் உள்ளே சுமார் 20 ஆயிரம் பேர் வரை இருக்க முடியும். ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுவருகிறது. இதனால் மைதானம் தன்னுடைய வரலாற்றை இழக்க நேரிடும். எனவே தமுக்கம் மைதானத்தில் தற்போது நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பணிகளுக்கு இடைக்கால தடைவிதிக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயனன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமுக்கம் மைதானத்தில் தற்போது நடைபெறும் பணிகளின் புகைப்படம், அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.