ஹஜ் யாத்திரை: வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை - சவுதி அரேபியா
ரியாத்: இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் வருடாந்திர ஹஜ் யாத்திரையின்போது வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 20 லட்சம் பேர் சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில், ஹ்ஜ் யாத்திரை மேற்கொள்ள சவுதி அரேபியா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சவுதியில் குடியிருப்பவர்கள் மட்டுமே இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக யாத்ரீகர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், காபாவை தொடுவதற்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் மொத்தம் இரண்டு லட்சத்து 9 ஆயிரத்து 509 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆயிரத்து 916 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் பங்கேற்க மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மாதம் சவுதி அரேபியா அறிவித்திருந்தது.
சவுதி அரேபியா யாத்திரையில் பங்கேற்பதை கட்டுப்படுத்துவது இது முதல் முறை அல்ல. 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளின் மத்தியில் காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எபோலா காரணமாக ஹஜ் யாத்திரையில் பங்கேற்க தடைவித்தக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட சவுதிகள் 2019ஆம் ஆண்டில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.