திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூட்டரங்கில் மாவட்ட அளவில் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, கரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் நகராட்சி நிர்வாக ஆணையருமான பாஸ்கரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் முன்னிலையில் இன்று (ஜூன் 17) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர், திருவள்ளூரில் நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டத்திலுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அனைத்துப் பணிகளையும் விரைவாக மேற்கொள்ளவும்; நோய்த் தொற்று பரவாமல் தடுக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அலுவலர்கள் அறிவுறுத்தினார்கள்.
மாவட்டத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைப்பது குறித்தும்; சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றில் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து ரோந்துப் பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது.
இக்குழுவின் முக்கியப் பணிகள் நான்கு சக்கர வாகனங்களில் போக்குவரத்தை தடுக்கவும், கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யவும், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினிகள் தெளித்தல் உள்ளிட்டவற்றை குறித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து நோய் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து, தொடர் நடவடிக்கை எடுக்கவும்; முகாம்களின் வாயிலாக அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி திட்ட இயக்குநர், சுகாதாரத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.