இங்கிலாந்தில் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 7ஆவது லீக் போட்டி கார்டிஃப் நகரில் நடைபெற்றுவருகிறது.முன்னதாக, இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய நிலையில் இரண்டு அணிகளும் உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பதீன் நைப் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் கேப்டன் திமுத் கருணாரத்னே, குசால் பெரேரா ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்களை சேர்த்த நிலையில், திமுத் கருணாரத்னே 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, வந்த திரிமான்னே, குசால் பெரேராவுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
21.1 ஓவர்களில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 144 ரன்களை எடுத்திருந்தது. டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதுபோல விளையாடுகிறார்கள் என நினைத்த இலங்கை அணியின் ரசிகர்களுக்கு ஆஃப்கான் வீரர் முகமது நபி ஷாக் மேல் ஷாக் தந்தார்.
அந்த ஓவரில் திரிமான்னே, மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோரை முகமது நபி தனது ஆஃப் ஸ்பின் மூலம் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பச் செய்தார். இதையடுத்து, திசாரா பெரேரா, உடானா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில், சிறப்பாக ஆடிய குசால் பெரேரா 78 ரன்களில் ரஷித் கானின் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதனால், 21.1 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்த இலங்கை அணி, அடுத்த 11.1 ஓவர்களில் 36 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதையடுத்து, இலங்கை அணி 33 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இலங்கை அணியில் மலிங்கா ரன் ஏதும் எடுக்காமலும், லக்மல் இரண்டு ரன்னிலும் களத்தில் ஆட்டமிழக்கமால் இருந்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஒருவேளை மழை நீண்ட நேரத்திற்குப் பிறகு நின்றால், டக்வொர்த் லூவிஸ் (டி.எல்) முறைப்படி ஆட்டம் தொடங்கப்படும். அப்படியானால், ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 25 ஓவர்களில் 160 முதல் 180 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், இலங்கை அணியை தோல்வியில் இருந்து மழை காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பில் அந்த அணி ரசிகர்கள் உள்ளனர்.