நிவர் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் புதுச்சேரி அரசு மேற்கொண்டுள்ளது.
ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு வாக்கி டாக்கி உள்ளிட்ட கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் காரைக்கால் மட்டுமின்றி அருகிலுள்ள பகுதிகளுக்கு உடனடியாக திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 40 பேர் நாளை காரைக்கால் வர உள்ளனர். அவர்களுடன் இணைந்து பணிபுரிய காரைக்காலை சேர்ந்த பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்களும் இணைந்து பணியாற்ற உள்ளார்கள்.
74 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மாவட்ட நிர்வாகத்தின் 1070 என்ற இலவசத் தொலைபேசி எண் 24 மணி நேரமும் அவசரத் தேவைகளுக்காகச் செயல்படும்" எனத் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் மற்றும் தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.