தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கீழ வீதியில் உள்ள கமலம் காம்பளக்ஸ் வணிக வளாகத்தில் 2ஆவது தளத்தில் எஸ்.வி.எஸ் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்துள்ளது.
இந்த நிறுவனம், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விரைவில் கடன் வழங்கப்படும். அதற்கு, வங்கி கடனுக்கு ஏற்ப நிறுவனத்தில் குறிப்பிட்ட தொகையினை முன்பணமாக செலுத்த வேண்டும். ஒரு கோடி வேண்டுமென்றால் 1 லட்சம் ரூபாய் பணம் செலுத்தினால் ஒரு கோடி கிடைக்கும்.
ஒரு லட்சம் வேண்டுமென்றால் கடனுக்கு ரூபாய் 10 ஆயிரம் செலுத்த வேண்டும். அதற்கு கணிணி ரசீது வழங்கி தங்களுக்காக கடன் தொகை வங்கி கணக்கிற்கு விரைவில் அனுப்பப்படும் என கூறியுள்ளனர்.
இவ்வாறு கும்பகோணம் திருவிடைமருதூர், பாபநாசம் வட்டங்களை சேர்ந்த பல நூறு பேரிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர்.
தற்போது, அந்த நிறுவனம் இருந்த இடம் முழுமையாக காலி செய்யப்பட்டு வெறும் தளமாக காட்சியளிக்கிறது.
சம்மந்தப்பட்ட வணிக வளாக உரிமையாளர் தற்போது அந்த இடம் வாடகைக்கு விடப்படும் என அறிவிப்பு செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பத்திற்கும் மேற்பட்டோர், மேற்கு காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து மோசடி புகார் அளித்துள்ளனர்.
இந்த நிறுவனம் பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பியோடிய தகவல் பணம் செலுத்திய பலருக்கு தெரியாது என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே பலர் கரோனா தொற்று, ஊரடங்கினால் வேலை இழந்து, வருவாய் இழந்து தவித்து வரும் நிலையில், இந்தத் தனியார் நிறுவனம் பல கோடியை சுருட்டிக் கொண்டு ஓடி தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.30 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் மீது புகார்!