தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல் சரக்குத் தளம் 9ல் நேற்று (ஜூன்19) எம்.வி. மைசிர்னி என்ற கப்பலிலிருந்து 55 ஆயிரத்து 785 டன் நிலக்கரி 24 மணி நேரத்தில் கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இச்சாதனையானது, இதற்கு முந்தைய சாதனையான கப்பல் சரக்குத் தளம் 9ல் எம்.வி. கீரின் கே மாக்ஸ் எஸ் என்ற கப்பலிலிருந்து 24 மணி நேரத்தில் கையாளப்பட்ட அளவான 55 ஆயிரத்து 363 டன் நிலக்கரியை விட அதிகமாகும்.
மார்ஷல் தீவு கொடியுடன் வந்துள்ள எம்.வி. மைசிர்னி கப்பல் பனமாக்ஸ் வகையைச் சேர்ந்தது. இது 82 ஆயிரத்து 117 டன் எடையும், 229 மீட்டர் நீளமும், 32.26 மீட்டர் அகலமும், 14.12 மீட்டர் மிதவை ஆழத்துடனும் கூடியது. இந்தோனேஷியா நாட்டிலுள்ள தஞ்சங்பரா என்ற துறைமுகத்திலிருந்து 76 ஆயிரத்து 999 டன் நிலக்கரியை வ.உ. சிதம்பரனார் துறைமுகத்திற்கு இக்கப்பல் எடுத்துவந்துள்ளது.
இக்கப்பலில் வந்த 76 ஆயிரத்து 999 டன் நிலக்கரியும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இக்கப்பலிருந்து நிலக்கரியை மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரங்களால் 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 785 டன் நிலக்கரி கையாளப்பட்டது.
வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், இச்சாதனையைப் படைக்கக் காரணமாகஇருந்த அனைத்துத் துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டினார்.
.