புதுவை சட்டப்பேரவையின் நான்காவது தளத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில், மதிப்பீட்டுக்குழு, பொதுக்கணக்குக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கரோனா நோய் பரவலைத் தடுக்க அரசு முன்னெடுத்த பணிகள் குறித்தும், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த அன்பழகன், வையாபுரி மணிகண்டன், திமுகவைச் சேர்ந்த சிவா, வெங்கடேசன், கீதா ஆனந்தன் ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புதுவை சட்டப்பேரவைச் செயலர் முனுசாமி, தலைமைச் செயலர் அஸ்வின் குமார், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண், நிதிச் செயலர் சுர்பிர் சிங், உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்கண்ணன், சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.