கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, அவசர சிகிச்சைகளுக்கு ரத்தம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு சார்பில் சிறப்பு ரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று(ஜூலை 11) நாமக்கல் மாவட்ட ஆயுத படை காவலர் கூட்டரங்கில் சிறப்பு ரத்த தானம் முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட எஸ்.பி அருளரசு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.
அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர், முதல் கட்டமாக காவல் துறையினர், ஊர் காவல் படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாகவும், ரத்தம் தேவையெனில் தொடர்ந்து காவல் துறை சார்பில், கரோனா பரிசோதனைக்கு பிறகு ரத்த தானம் வழங்கப்படும் என தெரிவித்தார்.