இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி20 அமைப்பிற்கான மாநாடு, ஜப்பானின் ஒசாகா நகரில் நாளையும் நாளை மறுநாளும் (ஜூன் 28, 29) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று ஜப்பான் சென்றடைந்தார்.
இன்று பகல் 1.50 மணிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளார். இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு இந்திய வம்சாவளி மக்கள் குபேயில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்சியில் பங்கேற்க உள்ளார்.
பின்னர் நாளை நடைபெறும் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மோடியின் இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 'நகரமயமாக்கல், மகளிருக்கு அதிகாரமளித்தல், பயங்கரவாதம் உட்பட பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.