கடந்த மே மாதம் 29ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள எஸ்.வி மங்கலம் பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் வங்கிக் கடன் பெற்றுத்தருவதாக, அடையாளம் தெரியாத நபர்கள் பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் அங்குள்ள இளைஞர்கள் சிலர் இதனைக் கவனித்து அந்த பேப்பரை வாங்கி படித்துள்ளனர். அதில் ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கியிருப்பதை கண்ட இளைஞர்கள் ஆத்திரமடைந்ததுடன், உடனடியாக கையெழுத்து வாங்கிய மர்ம நபர்களை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் அனைவரும் பீட்டா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், இப்பணிக்காக இவர்கள் அனைவரும் வெளிமாநிலங்களில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.இதையடுத்து, கிராம மக்களை சமாதானம் செய்த காவல்துறையினர், பீட்டா அமைப்பினரை எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் இதுபோன்று குறுக்கு வழியில் ஜல்லிக்கட்டை தடை செய்ய முயற்சிக்கும் பீட்டா அமைப்பினர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பீட்டா அமைப்பை தடைசெய்ய மாநில அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் எனவும் தமிழ்நாடு வீர விளையாட்டுக் கூட்டமைப்பினர் சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தனிடம் மனு அளித்தனர்.
அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரைப்பதாக மனுவைப் பெற்ற ஆட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து, தமிழ்நாடு வீர விளையாட்டு கூட்டமைப்பினர் கலைந்து சென்றனர்.