திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது.
இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இதனிடையே, கரோனா பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு ஜீன் 15ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெளிமாநிலம், வெளியூர் மாணவ மாணவிகள் கொடைக்கானலுக்கு வந்து தேர்வு எழுதுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுக்கு எவ்வாறு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் அல்லது அவர்கள் தனிமை படுத்தபடுவார்களா என்பது குறித்து இதுவரை தெளிவு படுத்தப்படவில்லை.
ஏற்கனவே சென்னையில் இருந்து பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிக்கு கரோனா பாதிப்பு உறுதியானது இப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள், பெற்றோர்கள் எங்கு தங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், தற்போது கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.
பள்ளி விடுதிகளும் ஜூன் 15 ஆம் தேதியே செயல்படும் என பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.
இதனால் மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. எனவே இது குறித்து தமிழ்நாடு அரசு முறையாக அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.