நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் கரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருகிறது. மருத்துவமனை, நகராட்சி, வங்கி, காவல்துறை, கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக, அலுவலகம் பூட்டப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் சோதனை செய்து, பரிசோதனை முடியும்வரை அலுவலகங்கள் பூட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கடந்த ஒருவாராமாக மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு உள்பட காவலர்கள் ஏழு பேருக்கு தொற்று உறுதியாகி அனைவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
காவல்துறையினர் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஒருநாள் கூட மயிலாடுதுறை காவல்நிலையம் பூட்டப்படவில்லை. முறையாக சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கும், தற்போது பணியில் இருக்கும் காவலர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.