ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கனகபுரம் அருகேயுள்ள செம்பாண்டாம்வலசு பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன.
இந்தப் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து சாயக்கழிவுத் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்றும் (ஜூலை30) அதே பகுதியிலுள்ள தென்னைமரத் தோட்டத்தில் 1000 டன் அளவிற்கு சாயத் திடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அலுவலர்களுக்கு தகவல தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விவசாய நிலப்பகுதிக்கு விரைந்து வந்த வருவாய்த் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
கழிவுகள் தன்மை, ஈரோடு பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளிலிருந்து கொட்டப்பட்டதா அல்லது வேறு பகுதியிலிருந்து வந்து லாரியின் மூலம் கொண்டு வந்து கொட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திடக்கழிவுகளை அகற்றி தங்கள் விவசாய நிலத்தை சுத்தப்படுத்தி தர வேண்டும் என்றும், அகற்றப்படாமல் போனால் தங்களது விவசாய நிலம் குப்பைக் கூடமாக மாறி விடும் அபாயம் உள்ளது. மேலும், வேளாண்மைப் பணி பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக அகற்றிட வேண்டும் என்று அலுவலர்களிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்ற அலுவலர்கள் குழு உடனடியாக திடக்கழிவுகள் அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விவசாய நிலப் பகுதியில் சட்டவிரோதமாக சாயக் கழிவுகளைக் கொட்டக் கூடாது என்னும் எச்சரிக்கை பலகைகள் நிறுவப்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும், விவசாய நிலப் பகுதியில் சாயத் திடக்கழிவுகள் கொட்டப்படுவது கண்டறியப் பட்டால் கழிவுகளைக் கொட்டும் சாயத் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விவசாய நிலப்பகுதியில் கழிவுகளைக் கொட்டும் ஆலைகள் மூடவும் உத்தரவிடப்படும் என்று அலுவலர்கள் எச்சரித்தனர்.
இந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் யார் எந்த ஆலையில் இருந்து இந்த திடக்கழிவுகள் கொண்டு வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கபடும் என விவசாயிகளுக்கு அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.