தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட சிவகளை கிராமத்தில் ஏறத்தாழ 2000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தொல்லியல் களத்தில், கடந்த சில மாதங்களாக ஆய்வுக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வந்தன.
தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் ஆதிச்சநல்லூரை அடுத்த சிவகளையில் அகழ்வு ஆய்வின் முதல்கட்டப் பணிகள், கடந்த மே 25ஆம் தேதி சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் தொடங்கியது.
அகழாய்வு பணி நடைபெற்று வந்த நிலையில், அங்கு ஏறத்தாழ இருபதிற்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இதனையடுத்து சிவகளை பகுதியில் வாழ்விடங்கள் இருந்ததற்கான முடிவை அடைந்த ஆய்வுக்குழு, அவற்றை கண்டறிவதற்காக கடந்த ஜீன் 28ஆம் தேதி துணை இயக்குநர் சிவானந்தம், வாலப்பான் பிள்ளை திரடு பகுதியில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அந்தக் களத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் பழங்காலப் பாறை கிண்ணங்கள், இடைக்கற்கால கருவிகள், கல்வட்டங்கள், இரும்புக் கருவிகளின் கழிவுகள், முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்ட வகைகள், எடை கற்கள், செம்பினாலான அறிய தொல் பொருள்கள் கிடைத்துள்ளன.
அத்துடன், 5 மண்பானை ஓடுகளில் தமிழ் கிராவிட்டி எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள் கிடைத்தன. கிராவிட்டி எழுத்துகள் இடை சங்கக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது.
இதனால் தொல்பொருள் ஆய்வாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆய்வாளர்கள், "தற்போது கண்டெடுக்கப்பட்டு உள்ள பானை ஓடுகளின் காலத்தை, அகழாய்வுப் பகுதியில் உள்ள மண்ணின் தன்மையைக் கொண்டே துல்லியமாக கணிக்க இயலும்.
கிராவிட்டி எழுத்துகள் என்பது கிறுக்கல் குறியீடாக கணக்கிடப்படுகிறது. இந்தத் தளத்தில் மீண்டும் ஆழமான அகழ்வாய்வு பணிகள் நடைபெறும் போது, முழுமையான குறியீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்ததைப் போல் நாம் சிவகளையிலும் வெண்கல பொருட்களைக் கண்டெடுத்தால் சிவகளை ஆதிச்சநல்லூருக்கு சமகாலத்தது எனக் கூறலாம். சிவகளையும் தோராயமாக கி.மு. 900ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தையக் காலத்தைச் சேர்ந்தது என நாம் கணக்கிட முடியும்" என தெரிவித்தனர்.
கி.மு. 900க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையதாக ஆய்வுகள் சொல்லும் ஆதிச்சநல்லூருடன் இணைந்த தொல்லியல் இடமாக சிவகளையை அறிவிக்கக் கோரி, பல்வேறு ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.