தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்குள்பட்ட ஏரிமலை, கோட்டூர்மலை அலக்கட்டு போன்ற பகுதிக்கு சாலை வசதிகள் இல்லை. இப்பகுதி மலைவாழ் மக்கள் திருப்பூர், ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளுக்குச் சென்று கூலி வேலை செய்து தங்கள் பிழைப்பை நடத்தி வந்தனா்.
கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கிராம மக்கள் வேலைவாய்ப்பின்றி தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இவர்கள் வருவாயின்றி உணவு தேவைக்காக மளிகை பொருள்கள் வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால், எரிமலை அரசுப் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர் சாந்தலிங்கம் என்பவரிடம் இக்கிராம மக்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர்.
சாந்தலிங்கம் மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரிடம் சமூக வலைதளம் மூலம் மலை கிராம மக்கள் உணவுபொருள்களின்றி தவிப்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், பள்ளி தலைமையாசிரியர் சாந்தலிங்கம் இருவரும் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரில் சென்று வழங்கினர். அப்போது, பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டும் என்று மக்களவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
உடனடியாக அவர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உயர் அலுவலர்களிடம் பேசி பொதுமக்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். அரசு அலுவலர்கள் இப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று பதிலளித்தனர்.
பின்னர் மத்திய வனத்துறை, மாநில வனத்துறை உயர் அலுவலர்களிடம் பேசி ஏரிமலைப் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தருவதாக பொதுமக்களுக்கு அவர் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, தங்களுக்கு உதவிய தலைமையாசிரியா் சாந்தலிங்கம், மக்களவை உறுப்பினர் செந்தில் குமாருக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: தமாகா விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் கரோனாவால் உயிரிழப்பு