இந்தியாவில் 542 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கவுள்ளது.
இதனிடையே, ஆந்திரப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.
தபால் வாக்குகளை அடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் 282 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பாஜக, இம்முறை 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என பெரும்பாலான ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளன.
இதனால், இம்முறை மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த கட்சியின் தொண்டர்கள் உள்ளனர். இருப்பினும், இந்தத் தேர்தலில் பாஜக அல்லது காங்கிரஸ் இவர்களில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மாநில கட்சிகளே முடிவு செய்யும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. எது எப்படியோ பாஜக, காங்கிரஸ், மாநில கட்சிகள் இவர்களில் யார் நாட்டின் தலையெழுத்தை மாற்றப்போகிறார்கள் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.