சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு பிறகு சென்னையில் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி திருவேங்கடம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15-ந்தேதி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ரவுடி காக்காத்தோப்பு பாலாஜியும், சீசிங் ராஜாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவர்களை தவிர 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ரவுடிகள் சம்பவ செந்தில், பாம் சரவணன் இருவரையும் பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வந்த நிலையில் 3 கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத பாம் சரவணன் பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம் வரதாபாளையம் என்ற பகுதியில் பதுங்கி இருந்த பாம் சரவணனை ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட பாம் சரவணன் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 30 வழக்குகள் உள்ளன.
இதையடுத்து தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட பாம் சரவணன் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். அப்போது எம்கேபி நகரில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்றனர். அப்போது பாம் சரவணன் போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இதனால் போலீசார் அவரை காலில் சுட்டு பிடித்துள்ளனர். இதனால் காலில் ரத்தக்காயத்துடன் மயங்கி விழுந்த பாம் சரவணனை பிடித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், பாம் சரவணன் இடமிருந்து ஒரு பட்டாகத்தி, 4 நாட்டு வெடிகுண்டுகள் கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் ஏற்கனவே 5 முறை பாம் சரவணன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் பாம் சரவணனை காலில் சுட்டுப் பிடித்த இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.
ரவுடி பாம் சரவணனின் அண்ணன் தென்னரசு, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி வாங்க காத்திருந்ததாக கூறப்படும் நிலையில் தற்பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.