கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் காசி. இவர் மீது இளம்பெண்களிடம் ஆபாச காணொலிகளை மிரட்டி, பணம் பறித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதையொட்டி பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் அளித்தப் புகாரில் காசி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நான்கு பெண்களும் ஒரு இளைஞரும் கொடுத்தப் புகாரில், காசி மீது ஒரு போக்சோ வழக்கு, இரண்டு பாலியல் வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு என மொத்தம் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே காசி குண்டர் சட்டத்தில் கைதானார். மேலும், இந்த வழக்குகள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி காவல் துறையினர் காசியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டதன் அடிப்படையில், ஐந்து நாள்கள் காவல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர், காசியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காசியின் சிபிசிஐடி காவல் நேற்றைய முன் தினம் (ஜூன் 19) முடிந்ததைத் தொடர்ந்து காசி, அவரது நண்பர் டைசன் ஜினோ ஆகியோருக்கு நீதிபதி உத்தரவுப்படி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிபிசிஐடி காவல் துறையினரால் காசியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மெமரி கார்டுகள், செல்போன்கள், காசிக்கு பல பெண்களால் அளிக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசு பொருள்களை கைப்பற்றியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மெமரி கார்டுகள் உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன்பின்னர் காசியுடன் நெருங்கிய தொடர்பு வைத்து, அவனது குற்றச் செயலுக்கு உதவிய முக்கியப் புள்ளிகள் சிலர் சிக்குவார்கள் என சிபிசிஐடி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.