மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் 'தடக்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
தொடர்ந்து ’கோஸ்ட் ஸ்டோரிஸ்’ படத்தில் நடித்த அவர், தற்போது நடித்து வரும் திரைப்படம் 'குன்ஜன் சக்ஸேனா' (GUNJAN SAXENA). 1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போர் மண்டலத்திற்குள் நுழைந்த முதல் இந்தியப் பெண் விமானியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பங்கஜ் திரிபாதி, அங்கத் பேடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஷரன் சர்மா இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரைக்கு வரும் என்று முன்னதாகக் கூறப்பட்டது. ஆனால் கரோனா நோய்த் தொற்றால் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது 'குன்ஜன் சக்ஸேனா' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிக விரைவில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள இத்திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.