உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, ஜுன் 14ஆம் தேதி நிலவரப்பட்டி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதில், இங்கிலாந்து 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து 114 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தது.
ஆனால் அதன் பிறகு, உலகக்கோப்பையில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி, இலங்கை, ஆஸ்திரேலியாவிடம் அடுத்தடுத்த தோல்வி அடைந்தது. இதன் விளைவாக, ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இங்கிலாந்து அணி இரண்டு புள்ளிகள் சரிவடைந்து 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம், 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது ஒரு புள்ளி அதிகம் பெற்று 123 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம், கடந்த ஒரு வருடங்களாக முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி தற்போது இரண்டாவது இடத்துக்கு சரிவடைந்துள்ளது.இந்த தகவலை, பிரபல கிரிக்இன்ஃபோ விளையாட்டுதளம் தனது அதிகார்வபூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
114 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து அணி இரண்டு புள்ளிகளை பெற்று 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால், 111 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணி இரண்டு புள்ளிகள் சரிவடைந்து 109 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், 109 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா தற்போது 112 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.