நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உதகையை சுற்றியுள்ள இத்தலார், எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக தொடரும் கன மழையால் இங்குள்ள பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) காலை எமரால்டு பகுதியில் சத்தியா நகர் எனும் இடத்தில் திடீரென மிக பெரிய அளவிலான நிலச்சரிவு மற்றும் பூமி பிளவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல், தீயணைப்பு துறையினர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து சென்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் இந்த இடத்திலிருந்து மாற்று பகுதிக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே, அரசும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து சேதமடைந்த பகுதிகளை சரி செய்து தர வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் தொடர் கனமழை: மின் விநியோகத்தில் தடை!