சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலிருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஹசாத் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தம்னி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் நேற்று (ஜூன் 10) காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
காவல் துறை அறிக்கையின்படி, "பண்ணை உரிமையாளர் ஹேமந்த் ராத்ரே, முதலில் கட்டுமானத்தில் உள்ள கிணற்றில் சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கியுள்ளார்.
அப்போது, அவர் சுவாசிக்க முடியாமல் கிணற்றில் சிக்கி மயக்கமடைந்தார். அவர் சிக்கலில் இருப்பதை உணர்ந்த அவரது மனைவி, உதவிக்காகக் கூச்சலிட்டார்.
அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த கிராம மக்கள் விரைந்துவந்து மூன்று பேர் கிணற்றில் இறங்கி ஹேமந்த் ராத்ரேவை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களும் கிணற்றினுள் சுவாசிக்க முடியாமல் மயக்கமடைந்தனர்.
நான்கு பேரும் வெளியே வராதததால் இது குறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி நால்வரையும் மீட்டனர்.
பின்னர், அவர்கள் நால்வரும் ஜெய்ஜெய்பூர் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் ஹேமந்த் ராத்ரே (37), நாகேந்திர மதுகர் (34), அவரது சகோதரர் மகேந்திர மதுகர் (31), சிந்தமணி பஞ்சரே (45) என அடையாளம் காணப்பட்டனர்" எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.