கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் தடாகம் சுற்றுப்பகுதிகளில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் கேரளாவில் உள்ள அட்டப்பாடி, சோலையூர், கோட்டதுறை ஆகிய கிராமங்களில் பல ஆண்டுகளாக தென்னை, வாழை, மக்காச்சோளம், திணை வகைகள், காய்கறி போன்றவற்றை வேளாண்மை செய்துவருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலாக்கப்பட்டது. எல்லைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
மேலும் இ-பாஸ் இல்லாமல் யாரும் மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தடாகம் போன்ற கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் கேரளாவில் உள்ள அவர்களது நிலத்திற்குச் சென்று வேளாண்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள எல்லைக்குள் சென்று விவசாயம் செய்த அனுமதி, ஏற்பாடு செய்துதர வேண்டி ஜாதி மத அரசியல் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.