திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மானூர் பாளையம் கிராமம், குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜாமணி (55). இவர் தாராபுரம் நகரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் 2012ஆம் ஆண்டு நீண்டகால விவசாய கடன் பெற்றிருந்தார். பெற்ற கடனை சரியாக செலுத்திய நிலையில், 2017ஆம் ஆண்டு 1.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். அவரது பூமியை மேம்படுத்தி விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார்.
மூன்று இடங்களில் போர்வெல் போட்டும் தண்ணீர் பற்றாக்குறை, தொடர்ச்சியான வறட்சி மற்றும் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை முழுமையாக செலுத்த இயலவில்லை. சிரமத்திற்கு மத்தியிலும் வங்கிக்கு தவணைகளை அவ்வப்போது செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தவணை தொகையையும், அபராத வட்டியையும் உடனே செலுத்த வேண்டுமென ஆக்ஸிஸ் வங்கி அலுவலர்கள்நெருக்கடி கொடுத்துள்ளனர்.
கரோனா காலத்தில் போதுமான வருமானம் இல்லாததால் அவரால் தொடர்ச்சியாக தவணையை செலுத்த இயலவில்லை, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை இந்த காலத்தில் வட்டி வசூலிப்பு மற்றும் தவணை வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவித்திருந்த நிலையில், கடந்த 2 வாரமாக வங்கிக் கிளை மேலாளர் மற்றும் வசூல் பிரிவு ஊழியர்கள் அவரது தோட்டத்திற்குச் சென்று தொடர்ந்து மிரட்டியுள்ளனர், கேவலமாகவும், தரக்குறைவாகவும் திட்டியுள்ளார்கள்.
அதோடு அவரது குடும்பத்தினரையும் மோசமான வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயி ராஜாமணி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து குண்டடம் காவல் கண்காணிப்பாளர் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விவசாயி தற்கொலை செய்து கொண்டு நான்கு நாட்கள் ஆகியும் வங்கி ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் காவல் துறை அலுவலர்கள் எடுக்காததால். இன்று தாராபுரம் ஆக்சிஸ் வங்கி முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், விவசாயி ராஜாமணி தற்கொலைக்கு காரணமான தாராபுரம் நகர ஆக்சிஸ் வங்கி கிளை மேலாளர் மற்றும் கடன் வசூல் அலுவலர்கள் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், அவர் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.