உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பரவல் தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் வேகமாக செயலாற்றி வருகின்றன. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உச்சபட்ச உயிரிழப்புகள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் வீரியமான நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் சிகிக்சைப் பெற்று வந்த 84 வயது முதியவரும், 82 வயது மூதாட்டி உள்ளிட்ட மூவரும் இன்று (ஜூலை 4) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
குணமடைந்த மூவருக்கும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சி சுந்தரம் பழ கூடைக்கள் கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்து வழியனுப்பிவைத்தார். இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், "கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் முதல் நாளே அவர்களுக்கு மனரீதியான கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.
முதலில் தாங்கள் நோயாளிகள் என்பதை அவர்கள் மறக்க வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கு நம் மீதான நம்பிக்கை ஏற்படும். அப்போது தான் அவர்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பை மருத்துவர்கள் பெற முடியும். ஒவ்வொரு முறையும் அவர்களை சந்திக்கும் போதும் அவர்கள் நோயில்லாதவர்கள் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே இங்கு இருப்பதாகக் கூறி அவர்களுடைய மன மகிழ்ச்சியை அதிகப்படுத்தி வருகிறோம். மன தைரியமே அவர்களை பாதி குணப்படுத்தி விடுகிறது.
இந்த முறைகளையே புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் நோயாளிகளிடம் பின்பற்றுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று ஏற்பட்டவர்கள் விரைவாக குணம் பெற்று வீடு திரும்புகின்றனர். இதுவரை தமிழ்நாட்டளவில், கோவிட்-19 பாதிக்கப்பட்ட அதிகம் பேர் வீடு திரும்பிய நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் முதலில் பதற்றம் கொள்வதை முற்றிலும் நிறுத்தி விட்டு தனக்கு ஒரு சாதாரண காய்ச்சல் வந்திருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். இதற்கான மருத்துவம் பார்த்துவிட்டு, நிச்சயம் வீட்டுக்கு திரும்புவோம் என்ற மனநிலையை கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையில் தொடங்கி 92 வயது முதியவர் வரை அனைவரும் பரிபூரண உடல் நலனை அடைந்து, மன மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு திரும்புகின்றனர். எனவே, நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் எந்தவித கவலையும் கொள்ள வேண்டாம்" என அவர் தெரிவித்தார்.
இது பற்றி பூரண நலத்துடன் வீடு திரும்பியவர்கள் கூறும் போது, நோய்த் தொற்று ஏற்பட்ட முதல் நாள் தங்களுக்கு மிகப்பெரிய மனக்கவலை ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நுழையும் பொழுது இது ஒரு அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா என ஆச்சரியப்படும் வகையில் இந்த மருத்துவமனையில் சுத்தம் மற்றும் சேவைகள் மிகச் சிறப்பாக இருப்பதை காண முடிந்தது. மன மகிழ்ச்சியோடு மருத்துவரின் ஆலோசனையை கேட்டு தாங்கள் மருத்துவம் செய்து கொண்டோம். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி செய்யப்பட்டுள்ள சேவைகள் மிகுந்த மன மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
முதியவர்களுக்கு கரோனா சிறப்பு சிகிச்சை அளித்து வெற்றிகரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தது மருத்துவத் துறையில் மிகுந்த சாதனையாக கருதப்படுகிறது.