புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை மாவட்டத்தில் ஒருவருக்குக்கூட கரோனா தொற்று இல்லாத நிலை இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்திருத்தனர். ஆனால், சமீப காலமாக காரைக்கால் மாவட்டத்திற்கு வெளிமாநிலம், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் இ- பாஸ் மூலமாகவும், மாவட்டத்தின் இன்னபிற மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமலும், அதிகளவில் மக்கள் காரைக்கால் உள்ளே வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மாவட்ட எல்லைவழியாக வருபவர்களின் முகவரி மட்டும் மருத்துவக் குழுவினர் பெற்றுக்கொண்டு, வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்தி அனுப்பிவைக்கின்றனர். முன்னதாக, காரைக்காலில் ஐந்து நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யபட்ட நிலையில், தற்போது சென்னையிலிருந்து வந்த ஏழு மாத கர்ப்பிணி உள்பட மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி, கடந்த ஒருவாரத்திற்கு முன்பாகவே சென்னையிலிருந்து காரைக்கால் வந்தாகவும், அவர் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் சகஜமாகப் பழகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் வசிக்கும் அப்பகுதி மக்கள் தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களை மாவட்ட நிர்வாகம் முறையாக பரிசோதனை மேற்கொள்ளாமலும், அவர்களை கண்காணிக்கத் தவறியதே காரைக்காலில் கரோனா தொற்று பரவக் காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:சித்த மருத்துவத்தால் விரைவில் குணமாகும் கரோனா!