சென்னை தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், " தமிழ்நாட்டில் வன்முறைக்கு பெயர் போன கட்சி திமுக. உட்கட்சி பிரச்னையில் தினகரன் அலுவலகத்தில் பத்திரிகை ஊழியர்களை எரித்துக் கொன்ற கட்சி அது. கள்ளத் துப்பாக்கி, கட்டப் பஞ்சாயத்து இவற்றுக்கெல்லாம் பெயர் போன கட்சி திமுக.
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து திமுக பயப்படுகிறது, பதறுகிறது. அதனால் தான் பிரதமர் மோடியின் பிறந்தநாளன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழாக்களில் தேவையில்லாத பிரச்னைகளில் ஈடுபட்டது.
குறிப்பாக, ஆலந்தூரில் சுவர் விளம்பரம் செய்த பாஜகவினரை திமுகவினர் மிரட்டியுள்ளனர். அதேபோல், ஆயிரம் விளக்கு பகுதியிலும் போஸ்டர்களை கிழித்திருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் போஸ்டரை பார்த்துக்கூட அவர்களால் பொறுக்க முடியவில்லை. திமுகவினரின் அராஜகத்தைக் கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம்.
தமிழ்நாடு முழுவதும் இத்தகைய அராஜகத்தில் ஈடுபட்டுவந்த திமுகவினரை கண்டித்து செவ்வாய்கிழமை (செப். 22) காலை 11 மணிக்கு பாஜகவின் சார்பில் சென்னையில் 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தேர்தல் நெருங்குகிற நிலையில் திமுகவின் அச்சுறுத்தல் தங்களுக்கு உத்வேகத்தை தருகிறது. எப்படி மாதிரி சட்டப்பேரவை நடத்தினார்களோ, அதுபோல மாதிரி முதலமைச்சராக மட்டுந்தான் திமுக தலைவர் ஸ்டாலின் ஆக முடியும்" என்றார்.