தூத்துக்குடி திரவியபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. லட்சுமியின் தாயார் நெல்லையில் உடல்நிலை சரியில்லாமல் இன்று இறந்துவிட்டார்.
இந்த தகவலைறிந்த லட்சுமி, தனது கணவருடன் தூத்துக்குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் நெல்லைக்கு புறப்பட்டார். ஆனால், அவர்களின் இருசக்கர வாகனத்தில் போதுமான அளவு பெட்ரோல் இல்லை. பெட்ரோல் பங்க்கில் நிலைமையை எடுத்துச் சொல்லியும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பணியாளர்கள் பெட்ரோல் வழங்க மறுத்துவிட்டனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த தம்பதியர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து அருகிலிருந்த தியாகராஜன் என்பவருக்குச் சொந்தமான பாரத் பெட்ரோலிய நிலையத்தில் சண்முகசுந்தரத்தின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பித்தர உடனடி நடவடிக்கை எடுத்தார்.
பெட்ரோல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சண்முகசுந்தரம் - லட்சுமி தம்பதியர் மனிதாபிமானத்தோடு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.