இது குறித்து அந்த நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆவின் எனும் வணிகப் பெயர் கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களிலும் பிரபலமாக உச்சரிக்கப்பட்டு வரும் பெயராக உள்ளது. இந்நிறுவனம் 4.5 லட்சம் பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் மூலம் தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 39 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 25 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் பால் உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக 13 லட்சம் லிட்டர் பாலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 11.60 லட்சம் லிட்டர் பாலும் விற்பனை செய்யப்படுகிறது. பால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் சென்னை மாநகர் பகுதி மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாதாந்திர பால் அட்டை விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
அனைத்து ஒன்றியங்களிலும் விற்பனை மேலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலமாக அனைத்து உணவகங்கள், சூப்பர் மார்கெட்டுகள், தேநீர் விடுதிகள் மற்றும் மளிகை கடைகள் ஆகிய இடங்களில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனையானது 30.06.2020 அன்று இதுவரை கண்டிராத உயர்ந்த அளவாக 12.03 லட்சம் லிட்டர் என்ற புதிய இலக்கினை எட்டியுள்ளது.
கரோனா தாக்கத்தின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும், தொடர்ந்து பால் வழங்கும் பொருட்டு, தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி உரிய நேரத்தில் கிடைத்திட, பொது மக்களுக்கு தேவைப்படும், இடங்களில் தற்காலிகமாக ஆவின் கடைகள் அமைத்தும் நடமாடும் பாலகங்கள் ஏற்படுத்தியும் பால் விற்பனை ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் அனைவரும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு ஆவின் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
எல்லா இடங்களிலிலும் ஆவின் பால், பால் பொருட்கள் கிடைத்திட ஏதுவாக ஆவின் முகவர் நியமன விதிகளில் ஆவின் நிறுவனம் மாற்றம் செய்துள்ளது. மேலும் இதற்கான வைப்புத் தொகை 1000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 495 புதிய விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆவின் நிறுவனத்தின் 24 மணிநேர நுகர்வோர் சேவை பிரிவு தொலைபேசி எண்: 7358018430; 044-23464575, 23464579, 23464578 மின்னஞ்சல்: aavincomplaints@gmail.com மூலம் முகவர் நியமனம் மற்றும் பால் அட்டைகளைப் பொது மக்கள் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் என பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கேட்டுக்கொண்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.