தமிழ்நாட்டில் கரோனா தாக்கத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் பணிபுரியும் நபர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர் சென்ற வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு சுகாதாரத் துறை ஊழியர்கள் பரிசோதனை செய்த பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று வரை 164 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் திருவாரூர் அம்மனூர் பகுதியைச் சேர்ந்த நபர் சென்னையில் ரேஷன் கடையில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பிய நிலையில், இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று திருத்துறைப்பூண்டி அருகே குன்னலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செங்கல்பட்டில் கட்டுமானப் பொறியாளராக பணியாற்றி வீடு திரும்பினார். இவருக்கும் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து திரும்பிய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது. இதில் 77 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 107 நபர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நேற்று ஒரே நாளில் 16 நபர்கள் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.