தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வழக்கை சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனடிப்படையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணி சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்பட்டுவருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிசிஐடி ஐஜி சங்கர், "சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். மேலும் காவலர் முத்துராஜ் தீவிரமாக தேடப்பட்டுவருகிறார். ஓரிரு நாள்களில் அவரும் கைது செய்யப்படுவார். மேலும் இந்த வழக்கில் யாரும் அப்ரூவராக மாறவில்லை.
சிபிசிஐடி சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். பிரண்ட்ஸ் ஆப் காவலர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
சில சிசிடிவி காட்சிகளும் சிக்கியுள்ளன. அதை முழுமையாக இன்னும் ஆராயவில்லை" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், "விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு மேலும் சிலர் கைது செய்யப்படலாம். முத்துராஜை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவருவது உண்மை இல்லை. அவர் தலைமறைவாக உள்ளார். மேலும் இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. நேர்மையான விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’சிறைச்சாலை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை’ - தென்மண்டல ஐஜி