நாளந்தா: பிகார் மாநிலம், நாளந்தாவில், தடம் புரண்ட சரக்கு ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் உயர் அழுத்த கம்பியில் சிக்கியதில் ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இந்த விபத்தைத்தொடர்ந்து பலர் அலறி துடித்தனர். மேலும் அங்கும் இங்கும் ஓடத்தொடங்கினர். பின்னர் காயமடைந்தவரை மீட்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.
கோஷியவான் பஜாரைச் சேர்ந்த ராஜேந்திர ஹல்வாய் என்பவரின் 16 வயது மகன் சூரஜ் குமார் மற்றும் அவரது நண்பன் கடரியா பிகாவைச் சேர்ந்த மனோஜ் என்கிற நீலுவின் மகன் சோட்டு ஆகிய இருவரும் நாளந்தா பகுதியில் விபத்துக்குள்ளான சரக்கு ரயிலில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென விபத்தில் சேதமடைந்த உயர் மின் அழுத்தக்கம்பியில் இருவரும் சிக்கினர். இதில் சூரஜ்குமார் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயத்துடன் சிகிச்சையில் உள்ளார்.
இந்த இரு இளைஞர்கள் மட்டுமில்லாது பல இளைஞர்கள் அந்த சரக்கு ரயிலில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றனர். திடீரென விபத்து ஏற்படவும், அங்கிருந்த இளைஞர் கூட்டம் அலறியடித்து ஓடியது. விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தையடுத்து, ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள கிராமங்களைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து இரு இளைஞர்களையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
ஜார்க்கண்டில் இருந்து பாட்னாவுக்கு நிலக்கரியுடன் சென்று கொண்டிருந்த 8 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று நேற்று(ஜூலை 3) நாளந்தாவின் ஃபதுஹா ரயில் பிரிவு ஏகங்கர்சராய் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. ரயில் விபத்துக்குள்ளானதைப் பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. இந்நிலையில் இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நடந்துள்ளது என அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:கொடைக்கானலில் தொடர் மழை; துண்டிக்கப்பட்டது சாலை - போக்குவரத்து பாதிப்பு