டெல்லி: சீன போர்க்கப்பல் ஒன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு வர இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. போர்க்கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு வர சீனா தரப்பில் இலங்கையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தபோதும், இந்தியாவின் எதிர்ப்பை மீறி கடந்த 10ஆம் தேதி சீன போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. 129 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 வீரர்கள் இருப்பதாகவும், இந்த படைக்கு கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குவதாகவும் இலங்கை கடற்படை தகவல் தெரிவித்தது. இக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் ஒரு நாள் மட்டும் நிற்கும் என இலங்கை கடற்படை தெரிவித்தது. இலங்கை அரசு அனுமதி அளித்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து 'ஷி யான் 6' என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல் வரும் அக்டோபர் மாதம் இலங்கையின் கொழும்பு மற்றும் ஹம்பன்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 90.6 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஆராய்ச்சி அல்லது கண்காணிப்பு கப்பல், இந்தியப் பெருங்கடலில் ஆராய்ச்சி மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை வருவது தொடர்பாகவும், இலங்கை கடற்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்வது தொடர்பாகவும் இலங்கை அரசிடம் சீனா அனுமதி கோரி உள்ளது. இலங்கை அரசு அனுமதி வழங்கக் கூடாது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, டெல்லியில் உள்ள ராணுவத்திற்கு உட்பட்ட மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் உதவி ஆய்வாளர் ஆனந்த்குமார் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் செயல்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. கப்பல்கள் வருகை போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கலாம். எந்த ஒரு போட்டியிலும் இல்லாமல், ஆசியாவை மையமாகக் கொண்டு நடுநிலையான வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறினாலும், வெளிநாடுகளிடம் இலங்கை வாங்கியுள்ள கடன் காரணமாக, இந்தியா, சீனா இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் அதற்கு உள்ளது.
உண்மையில், இலங்கையில் சீனா அதிக அளவு முதலீடு செய்துள்ளது. இதனால், கடற்பகுதியில் சீனாவை அனுமதிக்க முடியாது என இலங்கையால் கூற முடியாது. இந்த விவகாரத்தில் இந்தியா தனது அதிருப்தியை மட்டுமே வெளிப்படுத்த முடியும், ஆனால் சீனாவுக்கு இலங்கை அனுமதி வழங்குவதை தடுக்க முடியாது" என்று கூறினார்.
முன்னதாக கடந்த ஆண்டும் சீனாவில் ஆய்வுக் கப்பலை ஹம்பன்தோட்டை துறைமுகத்தில் இல்ங்கை அனுமதித்தது. அப்போது இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.