உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறப்பிக்கும்விதமாக விழா ஒன்றை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் டெல்லியில் நேற்று (செப்டம்பர் 26) நடத்தியது. இதில் கலந்துகொண்ட தலைமை நீதிபதி ரமணா சிறப்புரையாற்றினார்.
விழாவில் பேசிய அவர், "உலகில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை; அவர்கள் கைகளில் பூட்டப்பட்டுள்ள விலங்கைத் தவிர. 50 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற முழக்கத்தை உரிமைக் குரலாகக் கேட்க வேண்டும்.
நீதித் துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக உள்ளது. கீழமை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளில் 30 விழுக்காடு மட்டுமே பெண்கள் உள்ளனர். உயர் நீதிமன்றங்களில் இந்த எண்ணிக்கை 11 விழுக்காடாக மட்டுமே உள்ளது. உச்ச நீதிமன்றத்தை எடுத்துக்கொண்டால் மொத்தமுள்ள 33 நீதிபதிகளில் நான்கு பேர் மட்டுமே பெண்கள்.
நாடு முழுவதும் உள்ள 17 லட்சம் வழக்கறிஞர்களில் 15 விழுக்காட்டினர்தான் பெண்கள். நாடு முழுவதுமுள்ள 60 ஆயிரம் நீதிமன்றங்களில் 22 விழுக்காடு நீதிமன்றகளில் முறையான கழிவறை வசதிகள் இல்லை. இது பணிக்கு வரும் பெண்களுக்குப் பெரும் இடர்ப்பாடாக உள்ளது. இன்றைய பெண் வழக்கறிஞர்கள்தாம் எதிர்காலத் தலைமுறையினருக்கு முன்னுதாரணம்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கென தனித்துறை வேண்டும் - பாரதிதாசனின் பேரன் வலியுறுத்தல்