அங்குல் (ஒடிஸா): பெண் ஒருவர் நேற்று (ஜனவரி 28) சட்டப்பேரவை உறுப்பினர் வீட்டிற்குச் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பல்லாஹாரா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் முகேஷ் குமார் பால் வீட்டில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது வீட்டிற்கு வந்த பெண், எம்எல்ஏவின் குடும்பத்தாரிடம், தன்னை மூன்று மாதங்களுக்கு முன்பு வரை திருமணம் செய்வதாக உறுதியளித்திருந்த உங்கள் மகன், தற்போது என்னைத் தவிர்த்து வருகிறார் என்று கூறியுள்ளார்.
குடும்பத்தினர் பெண்ணை சமாதானப்படுத்த முயன்று, அவை தோல்வியில் முடிந்தது. முடிவில் சட்டப்பேரவை உறுப்பினர் இரவு 9:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அவர் பெண்ணை வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார். ஆனால், முடிவு தெரியும் வரை இங்கிருந்து நகரமாட்டேன் என்றும், உங்கள் அரசியல் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பாலிபாசி காவல் துறையினருக்குச் சம்பவம் குறித்து தகவல் கொடுத்துள்ளார் சட்டப்பேரவை உறுப்பினர் முகேஷ் குமார். உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர், பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணை முடிந்த பிறகு, கியோஞர் எனுமிடத்தில் இருக்கும் பெண்ணின் வீட்டிற்கு, அவரை அழைத்துச் சென்று காவல் துறையினர் விட்டுள்ளனர்.