ஹல்த்வானி (உத்தரகாண்ட்): வீடுகளில், இவளுக்கு பெரிய ஆறு அடி கூந்தல்-னு நினைப்பு என்ற ஏச்சு வழக்காடலை கேட்டிருப்போம். ஆறு அடி என்ன, எட்டு அடி வளர்த்து காண்பிக்கிறேன் எனக் கூந்தல் வளர்த்து சாதனை படைத்துள்ளார் கட்காரியைச் சேர்ந்த பெண் ஒருவர். பெண்களின் அழகில் முக்கியப் பங்கு வகிப்பது கூந்தல். அவர்கள் அந்தக் கூந்தலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வளர்க்கவும் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து எண்ணெய் மற்றும் ஷாம்பூக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதனால் எந்த விதப்பலனும் பெறாமல், என்ன செய்வது எனவும் தெரியாமல் திகைத்துப் போகின்றனர். ஆனால், கட்காரியாவைச் சேர்ந்த பெண் ரேணு தர்யாலின் இயற்கையான வழிமுறைகளை மட்டுமே பின்பற்றி 8 அடி மற்றும் 7 அங்குலம் கூந்தல் வளர்த்துக் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் முயற்சியில் உள்ளார்.
கூந்தல் குறித்து ரேணு தர்யாலினிடம் கேட்டபோது, தனக்கு சிறு வயதில் இருந்தே நீண்ட கூந்தல் இருப்பதாகவும், கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு கூந்தலை மேலும் நீளமாக வளர்ப்பதில் முழுக் கவனம் செலுத்தியதாகவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி தனக்கு நீண்ட கூந்தல் இருப்பதால் இதை வைத்து விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்ட முடிந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய இந்த ஆரோக்கியமான கூந்தலுக்கு பிரத்யேகமாக பணம் செலவு செய்வதில்லை எனக்கூறிய ரேணு சந்தைகளில் விற்கப்படும் எண்ணெய் மற்றும் ஷாம்பூக்களை இதுவரை பயன்படுத்தியது இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவிக்கிறார். அதற்கு மாற்றாக அம்லா(பெரிய நெல்லி) மற்றும் கற்றாழை போன்ற இயற்கையாக கிடைக்கும் போருட்களை வைத்தே தனது கூந்தலை பராமரிப்பதாகவும் அவர் டிப்ஸ் கொடுத்து உள்ளார்.
அது மட்டுமின்றி தனது முடியைக் காய வைக்க ஹேர் ட்ரையர்களை பயன்படுத்துவது இல்லை எனவும்; நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் தனது முடியை பராமரிப்பதற்காக செலவிடுவதாகவும் ரேணு தெரிவித்து உள்ளார். இப்படி தனது கூந்தலை பார்த்து பார்த்து பராமரித்து வரும் ரேணு தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி உத்தரகாண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து 2021ஆம் ஆண்டு ஐகான் விருது வழங்கி அம்மாநில அரசால் கவுரவிக்கப்பட்டார். அதேபோல, கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி இந்தியா ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது கின்னஸ் மற்றும் லிம்கா புத்தகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியில் உள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இயற்கையாக கிடைக்கும் பொருட்கள்தான் உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் என்பதற்கு ரேணு மிகப்பெரிய சாட்சியாக உள்ளார்.
இதையும் படிங்க: Chandrayaan-3: நிலவை நோக்கிய வெற்றிகரமான பயணத்தில் சந்திரயான்-3: இஸ்ரோ மகிழ்ச்சி.!