கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, பரவலின் தீவிரத்தைப் பொறுத்து படிப்படியாகத் தளர்வு அளிக்கப்பட்டது. மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதியளித்திருந்த போதிலும் ஒருசில மாநிலங்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுத்துவந்தன.
குறிப்பாக, நாட்டிலேயே கரோனா பரவல் அதிகமாக இருந்த மகாராஷ்டிர மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்குக்கூட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஹோலி, ரம்ஜான், நவராத்திரி போன்ற பண்டிகைகளை மக்கள் வீட்டிலிருந்தபடியே கொண்டாடினர். இச்சூழலில், நாளையிலிருந்து (நவ. 16) முறையான பாதுகாப்பு நெறிமுறைகளோடு பக்தர்கள் மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என மகாராஷ்டிர அரசு அறிவித்தது.
அதன்படி ஷிரடி சாய்பாபா கோயிலில் நாளையிலிருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவே தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக கரோனா தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.