தொடுபுழா (கேரளா): பத்தனாபுரம் பகுதியை அடுத்த, பாடம் பகுதியைச் சார்ந்தவர், நவ்ஷாத். நூறநாடு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அப்சானா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நவ்ஷாத் மீன் விற்பனை மற்றும் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். மனைவி, குழந்தைகளுடன் அடூர் - பருத்திப்பாறா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நவ்ஷாத் திடீரென காணாமல் போய் உள்ளார். இதை அடுத்து குடும்பத்தார் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி, கூடல் காவல் நிலையத்தில் நவ்ஷாத் காணாமல் போனதாகப் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து நவ்ஷாத்தை தேடி வந்துள்ளனர். ஆனாலும், போலீசாரால் நவ்ஷாத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன, நவ்ஷாத்தை கொன்றதாக அவரது மனைவி அப்சானா நேற்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தன்னுடைய கணவர் நவ்ஷாத்தை தனது நண்பர் நசீரின் உதவியுடன் சரக்கு ஆட்டோவில் சடலத்தை எடுத்துச் சென்றதாக சாட்சியம் அளித்தார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், நவ்ஷாத்தின் மனைவி அப்சானா தனது வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால் போலீஸ் குழப்பமடைந்தனர்.
இதனை அடுத்து நவ்ஷாத் உயிருடன் இருப்பதாகவும், அருகிலுள்ள ஊரில் தங்கியிருப்பதாகவும் தொம்மன்குன்னு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை அழைத்து வந்துவிசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ‘மனைவி அப்சானாவுக்கு பயந்துதான் ஊரைவிட்டு சென்றேன். என்னை தொடர்ந்து தாக்கி வந்தார். உயிருக்கு பயந்துதான் வீட்டை விட்டு ஓடினேன்’ என்று நவ்ஷாத் கூறியுள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒன்றரை வருடமாக கணவனை போலீசார் தேடியும் எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை. அதனால்தான் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியதாக அப்சானா கூறியதாகத் தெரிகிறது.
இதனை அடுத்து அப்சானா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 177, 182 (காவல்துறையை தவறாக வழிநடத்துதல்), 201 (ஆதாரங்களை அழித்தல்) மற்றும் 297 (மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கல்லறையில் அத்துமீறி நுழைந்தது, இறந்த உடலை இழிவுபடுத்துதல் மற்றும் அநாகரீகமாக நடந்து கொண்டது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்றதாக தாய் கைது!