"ஐஎஸ்ஐ ஏஜெண்ட்டுகளின் புகலிடமாக மேற்குவங்கம் உள்ளது" - மம்தா மீது பாஜக தலைவர் கடும் தாக்கு! - மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார்
ISI spy arrest: கொல்கத்தாவில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஒருவர் கைதாகி உள்ள நிலையில், மேற்குவங்க அரசு ஐஎஸ்ஐ ஏஜெண்ட்டுகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஐஎஸ்ஐ ஏஜெண்ட்டுகள் மேற்குவங்கத்தை தங்களது புகலிடமாகக் கருதுவதாகவும் மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் குற்றம்சாட்டி உள்ளார்.


Published : Aug 27, 2023, 2:25 PM IST
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று (ஆகஸ்ட் 26) பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறி 36 வயதான நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஹவுராவில் உள்ள அவரது வீட்டிலிருந்து அந்த நபரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்ததாக தெரிகிறது. அவரிடம் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான நபர் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், ஹவுராவில் வசித்து வந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில், ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் ஏஜெண்ட்டுகள் பலர் மேற்குவங்க மாநிலத்தில் தங்கி இருப்பதாக மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், "மேற்குவங்கத்தில் பாகிஸ்தானை விரும்பும் அரசு உள்ளது.
அதனால்தான் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக செயல்படுபவர்கள், குறிப்பாக ஐஎஸ்ஐ ஏஜெண்ட்டுகள் மேற்குவங்கத்தை தங்களது பாதுகாப்பான புகலிடமாகக் கருதுகிறார்கள். அதோடு, தங்களது தேச விரோதச் செயல்களைச் செய்ய இம்மாநிலத்தையே தளமாகப் பயன்படுத்துகிறார்கள். ஐஎஸ்ஐ ஏஜெண்ட்டுகளுக்கு மேற்குவங்க முதலமைச்சர் ஆதரவு அளித்து வருகிறார்" என்று குற்றம் சாட்டினார். பாஜக தலைவரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மம்தா பானர்ஜி தரப்பில் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மேற்குவங்க அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதாக மேற்குவங்க பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். முன்னதாக கடந்த ஜனவரி மாதம், மேற்குவங்க மாநில அரசு சார்பில் வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாளில் "ஆசாத் காஷ்மீர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. அந்த வினாத்தாள் சமூக வலைதளங்களில் வைரலானது.
மேற்குவங்க பாஜக தலைவர்களான திலீப் கோஷ், சுகந்தா மஜும்தார் உள்ளிட்டோர் இந்த வினாத்தாளை பகிர்ந்து, மம்தா அரசை கடுமையாக தாக்கிப் பேசினர். வினாத்தாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை 'ஆசாத் காஷ்மீர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேற்குவங்க அரசு மாணவர்களிடையே இந்தியாவுக்கு எதிரான மனநிலையை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
மாணவர்களின் வினாத்தாளில் இவ்வாறு குறிப்பிடுவது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கை என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மேற்குவங்க அரசு, இது தனிப்பட்ட ஒரு நபரின் கவனக்குறைவால் நடந்த தவறு என்றும் விளக்கம் அளித்தது.
இதையும் படிங்க: West Bengal: சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து - 6 பேர் பரிதாப பலி!