திருவனந்தபுரம்: இஸ்ரோ உளவு வழக்கில் தவறுதலாக கைது செய்யப்பட்ட மாலத்தீவு பெண்மணி, தொலைகாட்டசிக்கு அளித்த பேட்டியில், அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1994ஆம் ஆண்டு இஸ்ரோ ரகசியங்களை மற்றொரு மூத்த அலுவலருடன் உளவு பார்த்ததாக விஞ்ஞானி நம்பி நாரயணன், இரண்டு மாலத்தீவு பெண்கள் மற்றும் தொழிலதிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரான ஃபோஸியா ஹாசன் தற்போது இலங்கையில் வாழ்ந்து வருகிறார். அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த அவர், "நான் நம்பி நாரயணன் பெயரை கேள்விப்பட்டதே இல்லை. என்னை கைது செய்த காவல்துறையினர் அவரது பெயரை சொல்லுமாறு அடித்து சித்ரவதை செய்தனர்.
நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, மாணவியான எனது மகளை கைது செய்து பாலியல் துன்புறுத்தல் செய்து விடுவதாக மிரட்டினர். இதன் பின்னர் தான் நான் அவரது பெயரை சொன்னேன்.
இஸ்ரோவின் ரகசியங்களை கூறுவதற்கு அவரும், மற்றொரு நபரும் என்னிடமிருந்து பல டாலர்களை பெற்றுக்கொண்டதாக அழுத்தம் காரணமாக சொல்ல நேர்ந்தது.
தற்போது நாரயணனுக்கு இழப்பீடு வழங்கி இருப்பது போல், விசாரணையின் போது காவல்துறை சித்தரவதையால் உடல் ரீதியாக பாதிப்பு அடைந்துள்ள தனக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே இஸ்ரோ உளவு வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையில் மூவர் குழுவை நியமித்து, காவல்துறையினர் விசாரணையில் கூட்டு சதி நிகழ்ந்திருக்கிறது என்பதை உறுதி செய்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ புதிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், அது தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பிரதமர் வருத்தம்