ஆந்திரப் பிரதேசம்: ஒய்எஸ்ஆர் (கடப்பா) மாவட்டம், புலிவேன்டுலா தொகுதி, சக்ரயப்பேட்ட மண்டலத்தில் உயிரோடிருக்கும் நபர் இறந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட சுபஹான் பாஷா எனும் நபர், ரயசோதி எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதுடைய மகனும் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சுபஹான் பாஷா சக்ரயப்பேட்ட பகுதியில் உள்ள கிராம அலுவலரிடம் பிரதமர் நரேந்திர மோடியின் கிசான் சம்மன் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறுவதற்காக வின்ணப்பித்துள்ளார். அப்போது அங்கிருந்த அரசு அலுவலர், அவரின் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டிருப்பதால் சுபஹான் பாஷா அந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற முடியாது எனக் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அலுவலர்கள்: இதையடுத்து எப்படி தனது பெயரை நீக்க முடியும் என்ற சந்தேகத்துடன் மனைவியை சந்தித்து குடும்ப அட்டையை வாங்கிக்கொண்டு, தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த யோகஜநேய ரெட்டி எனும் அலுவலர் இணையத்தில் சுபஹான் பாஷாவின் தகவல்களை சரிபார்த்துள்ளார். அப்போது சுபஹான் பாஷா இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.
இவருடைய மனைவி விதவைகளுக்கு அளிக்கப்படும் சிறப்பு உதவித்தொகையை பெறுவதற்காக, இவருடைய பேரில் போலி இறப்புச் சான்றிதழ் வாங்கியிருப்பது இதையடுத்து தெரியவந்துள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் புகார்: இதன்பிறகு சுபஹான் பாஷா உரிய அலுவலர்களிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார். மேலும் அப்பகுதி மாவட்ட ஆட்சியரிடமும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் தான் உயிரோடு இருப்பதால் தனக்கு பிரதமர் நரேந்திர மோடியின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி - நிதி உதவி வழங்கிய தர்மபுரி எம்.பி.!