திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் அதானி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அங்குள்ள மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் துறைமுகம் கட்ட ஆதரவு தெரிவித்ததாக தெரிகிறது. அதானி துறைமுகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பேராயர், ஆயர்கள், மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கைதான மீனவர்களை விடுவிக்கக்கோரியும், அதானி துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேற்று(நவ.27) இரவு விழிஞ்சம் பகுதியில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆத்திரமடைந்த மீனவர்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில், 30-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். காயமடைந்த போலீசார் திருவனந்தபுரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையில் 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக 3,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க விழிஞ்சத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.