டெல்லி: கடந்த வாரம் பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு, மீறல் குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனு மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விசாரணைக்கு முன்னதாக, சில உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான 'நீதிக்கான சீக்கியர்கள்' அமைப்பிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் ஃபெரோஸ்பூரில் பிரதமரின் வாகன பாதுகாப்பு வளைய அணிவகுப்பில் ஏற்பட்ட குறைபாட்டிற்கு முழுப் பொறுப்பையும் தாங்கள் ஏற்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சீக்கியர்களுக்கு அநீதிகள்
'இது நீதிக்கான சீக்கியர் பொதுக்குழுவின் அமெரிக்காவிடமிருந்து வந்த செய்தி, பஞ்சாபில் மோடியைத் தடுப்பதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்' என்று அழைப்பில் பேசிய நபர் அறிவித்தார். மேலும், அந்த அழைப்பில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம், 'மோடி ஆட்சிக்கு உதவ வேண்டாம் - பஞ்சாப் சீக்கிய உழவர்கள் இறந்ததற்கு பிரதமர் மோடியின் கட்சிக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டும்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதேசமயம் கடந்த காலங்களில் சீக்கிய இன மக்களுக்கு அனைத்துவிதமான அநீதிகளும் இழைக்கப்பட்டன என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.
"1984இல் நிகழ்த்தப்பட்ட சீக்கியர் இனப் படுகொலையை நினைவில்கொள்ள வேண்டும். அப்போது ஒரு கொலையாளியைக்கூட கண்டுபிடித்து தண்டிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான சீக்கிய உழவர்கள் இறப்பு குறித்தும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். இன்று மீண்டும் நீங்கள் மோடிக்கு உதவினால், அது நீங்கள் செய்யும் வெட்கக்கேடான செயலாகும்" என்று அந்த அழைப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இது குறித்து விசாரணை நடத்த குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா சிறப்புக் குழுவினர் பற்றி தெரிவித்த தகவலின்படி, இக்குழுவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை தாங்குவார். இக்குழுவில் சண்டிகர் காவல் துறைத் தலைவர், தேசிய புலனாய்வு முகமை ஐஜி, புலனாய்வுப் பிரிவு கூடுதல் டிஜி உள்ளிட்டோர் இருப்பர் எனத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: உ.பி.யில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!