மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலாளர் சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "புதுச்சேரி பாகூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஜெயமூர்த்தி காவல் துறையினர் தாக்கியதில் இறந்தார்.
இது தொடர்பாக காவல் அலுவலர்கள் ஜெயகுருநாதன், திருமால், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவ அலுவலர் மருத்துவர் வெங்கட்ரமண நாயக் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு வழக்கு பிசிஆர் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை பிசிஆர் பிரிவு எஸ்.பி. பாலகிருஷ்ணன் நடத்திவருகிறார். இவர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். இதுவரை யாரையும் கைதுசெய்யவில்லை.
வன்கொடுமை தடுப்புச்சட்ட விதிகளின்படி இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து குற்ற அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும். உயர் நீதிமன்றம் வழக்கை நான்கு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டும் இதுவரை விசாரணையை முடித்து குற்ற அறிக்கை தாக்கல்செய்யவில்லை.
![death](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-05-sugumaran-pressrelease-tn10044_10062021202128_1006f_1623336688_958.jpeg)
விசாரணை அறிக்கையை மாற்றவும் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட காவல் அலுவலர்கள், சிறை கண்காணிப்பாளர் ஆகியோரை பணிநீக்கம் செய்யவும் உத்தரவிடக்கோரி காவலர் புகார் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ஆணைய தலைவர் ராஜசூர்யா விசாரணை அலுவலரை மாற்றவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பணியில் சேர்த்ததை மறுபரிசீலனை செய்யவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த வலியுறுத்தி ஆளுநர், தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.