ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் நேற்று (ஆக.15) கைப்பற்றினர்.
அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவப் படைகளை திரும்பப்பெற்றதை அடுத்து, ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை 20 ஆண்டுகளுக்குப்பிறகு தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர். தற்போது அதிபர் மாளிகை இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
முடிவுக்கு வந்த உள்நாட்டுப்போர்
தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றத் தொடங்கியபோது, அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து போர் முடிவுக்கு வந்ததாகத் தாலிபன்கள் அறிவித்தனர்.
அதிபர் வெளியேறினார்
இதுகுறித்து கானி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "தாலிபன்கள் என்னை விலகச்செய்துவிட்டனர். அவர்கள் காபூலையும், காபூல் மக்களையும் தாக்கவே வந்திருக்கிறார்கள்.
ரத்தக்களறி ஏற்படுவதைத் தவிர்க்க நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது" எனக் கருதுவதாக பதிவிட்டிருந்தார். இருப்பினும் தனது இருப்பிடம் குறித்து, எந்தத் தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
ஐ.நா. ஆலோசனை
இதையடுத்து ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று(ஆக.16) அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு ஆண்டுகள் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா சார்பில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நியூயார்க் செல்கிறார்.
தாலிபன்கள் உறுதி
ரஷ்ய வெளியுறவுத்துறை அலுவலர் ஜமீர் கபுலோவ் நேற்று கூறுகையில், 'தாலிபன்கள் தங்களுக்கும் மற்ற சில நாடுகளுக்கும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உறுதியளித்துள்ளனர்' என்று கூறினார்.
எனினும், அவர் மற்ற விவரங்களை வெளியிட மறுத்து காபூலில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை விட்டு வெளியேறவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் தாலிபன்கள் ஐ.நா.வின் நடவடிக்கைகளில் தலையிடமாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானுக்கு புதிய பெயர்
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை ஆப்கானிஸ்கான் இஸ்லாமிய அமீரகம் (Islamic Emirate of Afghanistan) என பிரகடனப்படுத்துவதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் முல்லா அப்துல் கானி பரதர் தலைமையில் செயல்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 53 வயதான இவர், முல்லா முகமது ஓமருடன் இணைந்து தாலிபன் அமைப்பை உருவாக்க முக்கியப் பங்கு வகித்தவர்.
முன்னதாக பரதர், சுமுகமான ஆட்சிமாற்றத்திற்காக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட அவர், நாட்டில் அமைதி மற்றும் நல்ல எதிர்காலம் மக்களுக்கு காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் பயணம்