கவுஹாத்தி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை கவஹாத்தியில் உள்ள புகழ்பெற்ற காமக்கியா கோயிலுக்கு சென்று பூஜை நடத்தினார். பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “பாஜகவைப் போலல்லாமல் தனது கட்சி தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நாங்கள் ஐந்து உத்தரவாதங்களை அளித்துள்ளோம். உத்தரவாதம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் பாஜகவைப் போன்றவர்கள் அல்ல, நாங்கள் உறுதியளித்ததை நிறைவேற்றுகிறோம்.
பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகாவில் எங்களது கட்சி விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தது. அங்கு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அந்த வகையில், அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை ரூ.365 ஆக உயர்த்த உத்தரவாதம் அளித்துள்ளோம். அதையும் நாங்கள் செய்வோம்” என்றார்.
இதைத்தொடர்ந்து அஸ்ஸாம் நிலச்சல் மலையின் உச்சியில் சக்தி பீடத்தில் பிரார்த்தனை செய்தார். இந்நிலையில் அவரால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) சில்சார், ஹாஃப்லாங், போகாஜன் ஆகிய பகுதிகளில் நடந்த பேரணிகளில் அவரால் கலந்துகொள்ளமுடியவில்லை.
இந்நிலையில், தனது கட்சி அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் உறுதி அளித்துள்ளார்.
அஸ்ஸாமில் காங்கிரஸ் அளித்த 5 உறுதிமொழிகள் வருமாறு:-
- சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்.
- 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம்.
- அனைத்து வீடுகளுக்கும் மாதம் 200 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
- இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
- தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குறைந்தப்பட்ச கூலி உறுதி செய்யப்படும்.
இவையே அஸ்ஸாம் மக்களுக்கு காங்கிரஸ் அளித்துள்ள 5 உறுதிமொழிகள் ஆகும்.
அஸ்ஸாமில் உள்ள 39 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் வியாழக்கிழமை (ஏப் 1) நடைபெறுகிறது. மீதமுள்ள 40 தொகுதிகளுக்கு இறுதிகட்ட தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும்.
மார்ச் 27ஆம் தேதி 47 தொகுதிகளுக்கு நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் 79.97 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. 81.09 லட்சம் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவிட்டிருந்தனர்.
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: ரிஷப் பந்த் நல்ல கேப்டனாக செயல்படுவார்- சுரேஷ் ரெய்னா