இந்தியாவை கரோனா இரண்டாம் அலை ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் இச்சூழலில், அதன் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன. வெளிநாடுகளும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிவருகின்றன.
இந்நிலையில், உலகம் முழுவதுமுள்ள பிற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்திவந்த இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக ஐநாவின் 75ஆவது கூட்டத்தொடர் தலைவர் வோல்கன் போஸ்கிர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "உலக நாடுகளுக்கு உதவிய இந்தியாவுக்கு உதவ வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த இக்கட்டான சூழலில் இந்திய அரசு மற்றும் மக்களின் மீதுதான் தனது சிந்தனை முழுக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.